Mahasankara Matrimony







என்னுடைய இனிய நண்பன் பசுபதி சுவாமிநாதன்.

05/05/2021
என்னுடைய இனிய நண்பன் பசுபதி சுவாமிநாதன்.

இவர் சமீபத்தில் செய்திருக்கிற ஒரு அற்புதமான சேவை, பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இப்படியா? எப்படி சாதாரணமாக ஒருவருக்கு மனம் வரும்? படித்து முடித்த பிறகு உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால், பசுபதி சுவாமிநாதனுக்கு இயற்கையாகவே அப்படிப்பட்ட மனம் வாய்த்திருக்கிறது. மகா பெரியவா அருள்!

பசுபதி சுவாமிநாதனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்....

பல காலம் அபுதாபியில் உத்தியோகம். ஒரு கட்டத்தில் உத்தியோக மாற்றம். அபுதாபியில் இருந்து கத்தாருக்கு.

காஞ்சி ஸ்ரீமடத்தின் தீவிர பக்தர். பெரியவா பக்தி அளவே இல்லை. வாய்க்கு வாய் ‘பெரியவா பெரியவா’ என்பார்.

வெளிநாடுகளில் இருந்தபோதும் அப்படித்தான். அங்கு எந்த ஒரு சத் சங்கம் நடந்தாலும் இவரது உதவி கட்டாயம் தேவைப்படும். அதுபோல் தன்னை வைத்துக் கொண்டவர். பாராட்டையோ, புகழுரையையோ எதிர்பார்க்க மாட்டார்.

கொரோனா குவலயம் முழுக்கக் கும்மியடித்து, பலருக்கும் வேலையில் பிரச்னை வந்தபோது, அது பசுபதி சுவாமிநாதனையும் விட்டு வைக்கவில்லை. போன வருடம் கத்தாரில் இருந்து திரும்பினார். இன்று வரை அவருக்கு அங்கே வேலை உறுதி செய்யப்படவில்லை.

என்றாலும், தன் குடும்பத்தினருடன் இணைந்து சென்னை சாலிகிராமத்தில் ஓட்டல், மளிகை, காய்கறி& பழங்கள் விற்பனை என்று கொரோனா காலத்தில் திட்டமிட்டு வியாபாரம் துவக்கினார். போய்க் கொண்டிருக்கிறது.

இன்று மதியம் யதேச்சையாக போன் போட்டு «க்ஷம லாபம் விசாரித்தேன். வழக்கம்போல் உற்சாகமாகப் பேசினார்.

பிறகு, ‘‘அண்ணா... ஒரு விஷயம்ண்ணா... கடந்த சில நாட்களாக ஒரு சர்வீஸ் பண்ணிண்டு இருக்கேன்’’ என்றார்.

‘‘என்ன சுவாமி... வெளிநாடுகள்ல பண்ணதை இங்கயும் ஆரம்பிச்சுட்டேளா?’’ என்றேன்.

‘‘அதில்லைண்ணா... தினமும் காலைல சுமார் மூணு மணி நேரம் ஒரு சர்வீஸ் எடுத்துண்டிருக்கேன். பக்கத்துல விருகம்பாக்கம் காமராஜர் சாலைல கவர்ன்மெண்ட் ஹெல்த் சென்டர் (நடிகர் விவேக் வீட்டுக்கு அருகில்) இருக்கு. அங்கே கோவிட் ஊசி போட்டுக்க ஒரு நாள் போனேன். கூட்டம் தாங்க முடியலை. அங்கே இருக்கிற பணியாளர்களால கண்ட்ரோல் பண்ண முடியலை. ஒரு நாள் நானே போய் வாலண்டரியா கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணி, எல்லாரையும் உள்ளே அனுப்பி வெச்சேன். அங்கே இருக்கிற டாக்டர்ஸ், நர்ஸ் மற்ற ஊழியர்களுக்குப் புடிச்சுப் போச்சு. ‘சார்... தினமும் காலைல இது மாதிரி வந்து பண்ணிக் கொடுக்க முடியுமா? நீங்க நல்லாவே ஆர்கனைஸ் பண்றீங்க‘னு சொன்னாங்க. தினமும் போக ஆரம்பிச்சுட்டேன்.

‘இன்னிக்கு எவ்ளோ இன்ஜெக்ஷன் வரப் போகுதுன்னு உங்ககிட்ட சொல்றேன் சார். அதுக்கு ஏத்தாப்போல நீங்க டோக்கன் குடுங்க. யாருக்கும் தேவை இல்லாத டென்ஷன் தரக் கூடாது’ என்று அங்கே இருக்கிறவர்கள் என்னோட சேவையை பயன்படுத்திக்கிறாங்க.

என்னோட சர்வீஸ் பாத்துட்டு இங்கே ஊசி போட்டுக்க வந்த சில பேரும் இப்ப என்னோட இணைஞ்சிருக்கா. மொத்தம் 12, 13 பேர் இப்ப இந்த சர்வீஸ்ல இருக்கோம். இந்த ஹெல்த் சென்ட்டர்ல எந்த ப்ராப்ளமும் இல்லாம பார்த்துக்கறோம். பெரியவா கிருபை’’ என்றார்.

என் கண்கள் கலங்கியே விட்டன.

இந்தக் காலத்தில் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டுப் போக வேண்டாம் என்று எல்லா குடும்பத்தினரும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறார்கள். அதுதான் அவசியமும்கூட.

ஆனால், பசுபதி சுவாமிநாதன் தன் வீட்டாரை சமாளித்து விட்டு தினமும் இங்கே வருவது மகா பெரிய(வா) சேவை.

அந்த மகான் அவருக்கு அருள் புரியட்டும்.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஒரு சொற்பொழிவில் அடியேனுக்கு வலப் பக்கம் அமர்ந்திருப்பவர் பசுபதி சுவாமிநாதன்.