Mahasankara Matrimony







வாழ்க்கை எத்தனை சுகமானது...

13/05/2021
வாழ்க்கை எத்தனை சுகமானது...

என்றாவது அதை அனுபவித்திருக்கிறோமா... அல்லது யோசிக்கத்தான் செய்திருக்கிறோமா?

எது கிடைக்கிறதோ, அதன் சுகத்தை நாம் உணர்வதில்லை.

எது கிடைக்கவில்லையோ, அதைத் தேடிக் காலத்தைத் தொலைப்போம்.

வளங்களை வாரி வழங்குகிறது இயற்கை.

மணம் வீசும் மலர்ச் செடிகள், நிழல் தரும் மரங்கள், காய் - கனிகள் தரும் செடி கொடிகள், உஷ்ணம் தரும் சூரியன், குளுமை தரும் சந்திரன், நீர் பெருக்கெடுத்தோடும் அருவிகள் - ஆறுகள்... இன்னும் எத்தனையோ! அனுபவித்திருக்கிறீர்களா?

கலாசாரத்தைப் பறை சாற்றுகின்றன ஆலயங்கள்.

ஆலயத்தினுள் அமைதியாக இருந்து இறை தரிசனத்தில் திளைத்திருக்கிறீர்களா? ராஜகோபுரச் சிற்பங்களை அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறீர்களா? பிராகாரத்தில் ஓரமாக அமர்ந்து தியானம் செய்திருக்கிறீர்களா? ‘உலகம் நலமாக இருக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா?

பாசத்தையும் பண்பாட்டையும் பகிர்ந்து கொள்ளவே குடும்பம்.

தாய் - தந்தையரோடு தாராளமாக நேரம் செலவழித்திருக்கிறீர்களா? சகோதரன் - சகோதரியோடு அன்போடு சண்டை போட்டு அடுத்த கணம் ஒரு புன்னகையோடு கைகுலுக்கி இருக்கிறீர்களா? திருமணம் ஆனபின் மனைவியோடு மனம் விட்டுப் பேசிய நாட்கள் எத்தனை? மகன் - மகளுக்கு எதிர்காலக் கனவுகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறீர்களா?

பேரிடர்களைக் கண்களுக்கு நேராகப் பார்த்திருக்கிறோம்.

வெள்ளம்... குழாயில் மட்டுமே தண்ணீர் வருவதைப் பார்த்த நாம், குடியிருப்புகளே மூழ்குகிற அளவுக்கு வெள்ளம் வரும் என்று யோசித்தோமா? சென்னை மாநகரே வெள்ளக் காடாக மாறிப் போனதைப் பார்த்திருக்கிறோம்.

சுனாமி... பனை மர உயர அளவுக்கு அலைகள் சீறி வந்து கொத்து கொத்தாக மனிதர்களையும், இன்ன பிறவற்றையும் அள்ளிச் சென்றதைப் பார்த்திருக்கிறோம்.

புயல்... கரண்ட் கம்பங்களும், கைகளால் கட்டிப் பிடிக்க முடியாத பருமன் உள்ள மரங்களும் வீடுகள் மீதும், சாலைகளிலும் சரிந்து விழுவதைப் பார்த்திருக்கிறோம்.

பூகம்பம்... பொலபொலவென சீட்டுக் கட்டுகள் சரிந்தது போல் கட்டடங்கள் மண்ணோடு மண்ணாகிப் போனதைப் பார்த்திருக்கிறோம்.

இப்போதும் ஒரு பேரிடர்..! இதன் பெயர் - கொரோனா!

கொரோனாவைக் கண்ணால் பார்த்தவர் யாரேனும் இருக்கிறீர்களா?

கூட்டம் கூட்டமாக உயிர்களைக் களவாடுகிறதே... கொத்துக் கொத்தாக மருத்துவமனைக்குள் தள்ளுகிறதே..!

எதிரியைக் கண்களுக்கு நேராகப் பார்த்தாலாவது பயந்து ஓடலாம்; பதுங்கிக் கொள்ளலாம்.

கொரோனா, கண்களுக்குத் தெரியவில்லை. சுழற்றிச் சுழற்றி அடிக்கிறதே!

சுருண்டு உட்கார்வதை விட வேறு வழியில்லை. சும்மா கம்பு சுற்றுவதை விட்டு விடுவோம்.

இறைவன், பெரியவன். மகான்கள், மகோன்னதர்கள்.

தெய்வ பக்தியும், குரு பக்தியும்தான் கண்ணுக்குத் தெரிந்தவற்றிலிருந்தும், தெரியாதவற்றிலிருந்தும் நம்மைக் காப்பாற்றக் கூடியது. பிரார்த்தனைகளை வலுப்படுத்துங்கள்.

கோயிலுக்குப் போனால்தான் பக்தியா?

உட்கார்ந்தால் வீடே கோயில்! மனமே கருவறை!

இறைவா... உலகைக் காப்பாற்று... மன்றாடி வேண்டுகிறோம்.

பிரார்த்தனைகளுடன்,
பி. சுவாமிநாதன்