Mahasankara Matrimony







உழைப்பு, உண்மையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

23/03/2021
உழைப்பு, உண்மையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

இயற்கையாகவே இது என் உடலில் ஒட்டிக் கொண்டது, பிறப்பில் இருந்தே! பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வேன்.

கஷ்டம் துடைக்க சிறுவனாக இருக்கும்போதே தீபாவளி சமயத்தில் கிராமத்தில் பட்டாசு விற்றிருக்கிறேன். வேப்பங்கொட்டை சேகரித்து விற்றிருக்கிறேன்.

கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத காலத்தில் மூன்று வருடப் படிப்பு முடிகிறவரை சுமார் 30 சந்தாதாரர்களைக் கொண்டு சர்க்குலேஷன் லைப்ரரி நடத்தி இருக்கிறேன்.

சென்னைக்கு வந்த பிறகு சீஸன் பிஸினஸ் நிறைய செய்திருக்கிறேன்.

சென்னைக்கு வந்த புதிதில் ‘ஸ்ரீவி சேல்ஸ் அன்ட் சர்வீஸஸ்’ என்ற கம்பெனியில் சீனிவாச நகரில் (ஆர்.ஏ.புரம் அருகே) வேலைக்குச் சேர்ந்தேன். அது 1986-ஆம் வருடம். ஆபீஸ் அசிஸ்டெண்ட் வேலை. மாதம் 250 ரூபாய் சம்பளம் என்று முதலாளிகள் சொன்னார்கள். ஒரே வாரத்தில் நேர்த்தியான என் வேலையைப் பார்த்து விட்டு, 400 ரூபாயாக உயர்த்தி விட்டனர் முதலாளிகள்.

1987-ல் விகடனில் வேலை கிடைத்தது. 700 ரூபாய் சம்பளத்துக்குச் சேர்ந்தேன்.

22 வருஷம் விகடனில் விசுவாசமாக வேலை செய்தேன். விகடனில் என் பெயர் இன்றைக்கும் நிலைத்திருக்கும்படி பல பணிகளை இறைவன் எனக்கு வழங்கி இருக்கிறான். விகடன் பவழ விழா மலர், அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் - இவற்றை தயாரிக்கிற பணியை என்னிடம் வழங்கியது நிர்வாகம்.

சுமார் 30 ஆண்டுகளாக வெளிவராமல் நின்று போயிருந்த தீபாவளி மலரை முதன் முதலாக அடியேன்தான் தயார் செய்தேன். எத்தனையோ ஜாம்பவான்கள் தயார் செய்த பொறுப்பு, அடியேனிடம் வழங்கப்பட்டது. நிறைவாகத் தயார் செய்தேன். ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் உட்பட பலரது பாராட்டுகளையும் பெற்றேன்.

பின்னர், ஆன்மிக இதழ் ‘சக்தி விகடன்’ துவங்க மீட்டிங் நடந்தது. ‘யாரை இதற்குப் பொறுப்பாகப் போடலாம்?’ என்ற கேள்வி எழுந்தபோது, நிர்வாகத்தில் என்னை ‘செலக்ட்’ செய்தார்கள். நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன்.

நிறைவான ஒரு ஆன்மிக இதழில் என்னென்ன இருக்க வேண்டும் என்கிற செறிவான உள்ளடக்கத்தைத் தயார் செய்தேன். ஆறு வருடம் அதன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தேன்.

பிறகு, ‘திரிசக்தி’ நிர்வாகம். அங்கேயும் பல்வேறு அவதாரங்கள் எடுத்தேன். கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்தேன்.

ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆன்மிகச் சொற்பொழிவுத் துறைக்கு வந்தேன். ‘பலரும் பேசுகிறார்களே... இதில் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டவர்கள் பலர் இன்றைக்கும் என்னுடன் ‘டச்’சில் இருக்கிறார்கள். மகா பெரியவா அருளால், சொல்லக் கூடிய உயரத்தில் இருக்கிறேன் சொற்பொழிவுத் துறையிலும்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என்று என் பேச்சுப் பணியும், எழுத்துப் பணியும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் காரணம் - உழைப்பு. இதைத் தாண்டி மகா பெரியவா ஆசிர்வாதம்.

உழைப்பு உண்மையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். குருவருள் நிச்சயம் கிடைக்கும்.

எதையும் சாதிக்கலாம்.

அடியேனது யூ டியூப் சேனலை கொரோனா காலத்துக்கு முன் வரை தூசி தட்டாமல் வைத்திருந்தேன். காரணம், நேரமில்லாமை. நேரத்தைக் கொடுத்தது கொரோனா. ஐயாயிரத்துச் சொச்சத்தில் இருந்த சப்ஸ்கிரைபர்களை இன்றைக்கு இருபத்தையாயிரமாக உயர்த்தி இருக்கிறார் மகா பெரியவா. ஒரு வருட காலத்தில் சுமார் இருபதாயிரம் சப்ஸ்கிரைபர்கள் இணைந்துள்ளார்கள். காரணம் - இதில் அடியேன் கொடுக்கிற உள்ளடக்கம் (கன்டென்ட்).

அடியேனது சிரம் தாழ்ந்த நன்றிகள் அன்புக்குரிய சப்ஸ்கிரைபர்களே... மற்றும் இதன் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

இன்னமும் உழைக்க வேண்டும். உண்மையும் உறுதியும் அன்று போல் என்றும் விளங்க வேண்டும்.

இதுவே காத்தருளும் தெய்வமான மகா பெரியவாளிடம் அடியேன் வைக்கிற வேண்டுகோள்... பிரார்த்தனை!

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்