Mahasankara Matrimonyமேட்டூர் ஸ்வாமிகளின் ஆராதனை தினம் இன்று

14/11/2020
மேட்டூர் ஸ்வாமிகளின் ஆராதனை தினம் இன்று.

இது போன்ற ஒரு தீபாவளி தினத்தில்தான் (வருடம் 2013) ஸித்தி ஆனார்.

இந்த மகானைப் பற்றி அடியேன் எழுதியதில் இருந்து சில இங்கே...

மேட்டூர் ஸ்வாமிகள் பாதார விந்தங்களில் பணிவோம்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

- - - - - - -

நேற்று (27.07.2019 சனி) கோவிந்தபுரம் சென்றிருந்தேன். இது ஓர் அவசரமான பயணம். நான் திட்டமிட்டபடி சில தலங்களுக்குச் செல்ல முடியவில்லை.

சொற்பொழிவாற்ற வந்த பின் ஓரிடத்துக்குப் போனால், அங்கு நான் திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை. அப்படி இப்படி என்று தாமதம் ஆகி விடுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் புரிந்து கொண்டு விட்டேன்.

எனது கும்பகோணம் விசிட்டின்போது கோவிந்தபுரம் வழியே கடந்து செல்லும்போதெல்லாம் பெரும்பாலும் மதிய வேளையாக இருக்கும். மகா பெரியவா தபோவனம் நடை சாத்தப்பட்டிருக்கும். உள்ளே சென்று தரிசிக்கிற பாக்கியம் இருக்காது.

இதற்காக, திட்டமிட்டே நேற்று பகல் வேளையில் கோவிந்தபுரம் மகா பெரியவா தபோவனம் சென்றேன். மகா பெரியவா திருமேனிக்கும், சுற்றியுள்ள ஆச்சார்யர்கள் திருமேனிகளுக்கும் அபிஷேகம் ஆகிக் கொண்டிருந்தது. ஏகாந்தமான சூழ்நிலை.

பின்புறம் மேட்டூர் ஸ்வாமிகள் அதிர்ஷ்டானம். அங்கே சென்று சுமார் அரை மணி நேரம் தரிசித்தேன்.

அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் இது.

காரணம் - மகா பெரியவா அருளிய ஒரு திருவாக்கு.

‘நான் 120 வருடங்கள் இருப்பேன்’ என்று மகா பெரியவா ஒரு முறை அருளி இருக்கிறாராம். ஆனால், மகா பெரியவா 100 வயதில் ஸித்தி ஆகி விட்டார். பெரியவா ஸித்தி ஆகி 20 வருடங்கள் கழித்துதான் மேட்டூர் ஸ்வாமிகள் ஸித்தி ஆகி இருக்கிறார். எனவே, மேட்டூர் ஸ்வாமிகளாக மகா பெரியவா வாழ்ந்திருக்கிறார்.

இன்றைக்கும் இங்கே ஆச்சாரம், அனுஷ்டானம் எல்லாம் மிக ஸ்ட்ரிக்ட்டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விறகு அடுப்பில்தான் சுத்த அன்னம் நிவேதனம்.

2013 தீபாவளி தினத்தன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஸித்தி ஆனார். அன்றைய தினம் கோவிந்தபுரம் சென்று அவரது திருவுடலைத் தரிசிக்கக் கூடிய ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

மகா பெரியவா சொன்ன எளிமையைக் கடைசிவரை சிரமேற்கொண்டு, தன் புகைப்படம்கூட வெளி வராமல் பார்த்துக் கொண்டு, புலன் அடக்கத்துடன் வாழ்ந்து, தன் காலத்தை மிகவும் அமைதியாக கோவிந்தபுரத்தில் மகா ஸ்வாமிகள் தபோவனத்தின் ஓரமாக ஓர் அறையில் கழித்தவர் மேட்டூர் ஸ்வாமிகள்.

மேட்டூர் ஸ்வாமிகளை நான் முதன் முதலாக சந்தித்த அனுபவம் சுவாரஸ்யமானது.

மேட்டூர் ஸ்வாமிகளின் அன்பாலும் அரணைப்பாலும் பின்னாளில் பெரிதும் கவரப்பட்டது நான் பெற்ற பேறு என்றே சொல்ல வேண்டும்.

நான் ஆசிரியராக இருந்த ‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’ குறித்து பக்தர்களின் அனுபவங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருந்த நேரம்... ஒரு முறை கும்பகோணம் சென்றிருந்த நான் கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மகா பெரியவா அனுபவங்கள் வெளியான ‘திரிசக்தி’ இதழ்களையும் கொடுத்தேன் (அதுவரை எனக்கு அறிமுகம் இல்லை).

‘மகா பெரியவா குறித்த செய்திகளை அவரது பக்தர்களிடம் இருந்து திரட்டி தொடர் எழுதி வருகிறேன்’ என்று சொன்னேன்.

‘ரொம்ப கவனமா எழுதுங்கோ... ஆதாரமானதை மட்டும் எழுதுங்கோ’ என்று என் மேல் நம்பிக்கை இல்லாமலே பேசிக் கொண்டிருந்தார்.

‘ஆத்மார்த்தமாகவும் ஓரளவு ஆதாரத்துடனும்தானே எழுதி வருகிறோம்... இவர் இப்படிச் சொல்கிறாரே?’ என்று ஒரு குழப்பத்துடன் நமஸ்காரம் செய்து விட்டு, திருப்தி இல்லாமலே திரும்பினேன்.

இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கோவிந்தபுரம் மகா ஸ்வாமிகள் ஆலயத்தைத் தரிசிக்க குடும்பத்துடன் போயிருந்தேன். ஆலயத்தில் ஆச்சார்ய புருஷர்களை தரிசித்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள அர்ச்சகர், ‘நீங்க திரிசக்தி ஆசிரியர் சுவாமிநாதன்தானே... நீங்க எப்ப வந்தாலும், ஸ்வாமிகளைப் பாத்துட்டுப் போகுமாறு சொல்லி இருக்கார். உங்களைப் பத்தி ‘வந்தாரா? வந்தாரா?’னு அடிக்கடி கேட்டுண்டே இருப்பார். ஸ்வாமிகளை அவசியம் பாத்துட்டுப் போங்கோ’ என்று சொன்னார்.

இது இரண்டாவது தரிசனம். மனதில் உற்சாகத்துடன் ஸ்வாமிகளைப் போய் தரிசித்தேன்.

புன்னகையுடன் வரவேற்றார். ‘நீங்க கொடுத்துட்டுப் போன திரிசக்தி இதழ்கள்ல ‘மகா பெரியவா’ தொடரைப் படிச்சேன். நன்னா வந்திருக்கு. தொடர்ந்து நிறைய எழுதுங்கோ’ என்று ஆசிர்வதித்தார் (இந்த அருளாசியினால்தான் மகா பெரியவா நூல் இன்று பத்து பாகங்கள் வெளியாகி இருக்கிறது). சுமார் 40 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த மாதங்களில் போனபோது இதுபோல் முக்கால் மணி நேரம் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

அப்பேர்ப்பட்ட மகானின் அதிர்ஷ்டானத்தில் இன்றைக்கும் பல அற்புதங்கள் நடக்கின்றன.

கும்பகோணம் செல்கிற வாய்ப்பு கிடைக்கிற அன்பர்கள், அவசியம் கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளையும் தரிசியுங்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்