Mahasankara Matrimonyஎந்த ஒரு வியாபாரம் - தொழிலாக இருந்தாலும், ஒரு கண்காணிப்பாளர் வேண்டும்

02/11/2020
எந்த ஒரு வியாபாரம் - தொழிலாக இருந்தாலும், ஒரு கண்காணிப்பாளர் வேண்டும். மேனேஜர், சூபர்வைஸர் என்பர். கிட்டத்தட்ட ஆல் ரவுண்டர். இன்றைக்கு அந்த போஸ்ட்டைத்தான் ‘சி.ஈ.ஓ.’ என்கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள்.

பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கழுத்தில் டை கட்டிக் கொண்டு ஒருவர் சுற்றிக் கொண்டே இருப்பார். சி.சி.டி.வி. கேமரா சுழல்வதை விட இவர் அதிகம் சுழன்று கொண்டிருப்பார். அங்கு எதுவாக இருந்தாலும், இவர்தான் முன்னே போய் நிற்பார். பிரச்னை என்றால், சாதுர்யமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு ரொம்பவும் பொறுமை அவசியம். கஸ்டமர்களைக் கைக்குள் வைத்திருக்க வேண்டும். தப்பித் தவறி அடுத்த பிராண்டுக்கு/ கடைக்கு கஸ்டமர்கள் மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

1980-களின் இறுதியில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் இரண்டு வெகுஜன ஓட்டல்கள் ஃபேமஸ். பழைய ஆனந்த் தியேட்டருக்குப் பக்கத்தில் இந்த இரண்டு ஓட்டல்களும்.

ஒன்று - உடுப்பி ஓட்டல்.

இன்னொன்று - தவுஸண்ட்லைட்ஸ் கஃபே.

1987-ல் விகடனில் சேர்ந்தபோது ஓவர்டைம் ஒர்க் நிறைய வரும். அப்போது நண்பர்கள் பட்டாளத்துடன் சாப்பிட இந்த இரண்டு ஓட்டல்கள்தான் மாறி மாறிப் போவோம்.

இதில் தவுஸண்ட்லைட்ஸ் கஃபேயில் காபி சூப்பர். அப்படி ஒரு டேஸ்ட். நிறைவான காபி. விகடன் ஆபீஸில் ஃப்ளாஸ்க்கில் இந்த காபி இருந்து கொண்டே இருக்கும்.

விகடன் ஊழியர்கள் இரவுப் பணியின்போது டிபன் எங்கே வாங்கினாலும் பரவாயில்லை., காபி மட்டும் தவுஸண்ட்லைட்ஸ் கஃபேதான். மாற்றம் இருக்காது.

ஆரம்பத்தில் ‘ஆல்ரவுண்டர்’ பற்றிச் சொன்னேன் அல்லவா? தவுஸண்ட்லைட்ஸ் கஃபேயில் ஒரு ஆல்ரவுண்டர் உண்டு.

பெயர் நினைவில் இல்லை. அவரை ‘மாமா’ என்று அழைப்போம். சொந்த ஊர் பாண்டிச்சேரி.

இவரை ஒரு முறை யாரேனும் பார்த்து விட்டால் காலம் முழுக்க மறக்க முடியாது.

குள்ளமும் இல்லை; உயரமும் இல்லை. மொழுமொழுவென்று முகம். கிட்டத்தட்ட கிஷ்மு ஜாடையில் இருப்பார். மடித்துக் கட்டிய வேஷ்டி. ஏதோ ஒரு லைட்கலர் ஷர்ட். குரல் அப்படி ஒரு கம்பீரம். டேபிளில் இருந்து கிச்சனுக்குக் கேட்கும்படி ‘ரெண்டு மசால் தோசை’ என்பார்.

இவரது தோற்றமும், உபசரிப்பும் வந்தவர்களை வீழ்த்தி விடும். ஓட்டலுக்குள் நுழைந்ததும் இவரைத்தான் தேடுவார்கள்.

இந்த மாமாவின் உபசரிப்புக்கென்றே தவுஸண்ட்லைட்ஸ் கஃபே பல முறை போயிருக்கிறேன்.

ஓட்டலுக்குள் சாப்பிட யார் நுழைந்தாலும் மாமாவின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. ‘வாங்கோ’ என்று கல்யாண மண்டப வாசலில் நின்று கூப்பிடுவது போல் அழைத்து, உட்கார்வதற்கு டேபிள் காண்பிப்பார்.

நாங்கள் நுழைந்தால் போதும்... மாமா உற்சாகம் ஆகி விடுவார். ‘சுவாமிநாதன் வந்தாச்சு... இலையைப் போடுடா’ என்று உத்தரவிடுவார்.

இலையோடு ஒரு ஆசாமி வருவார். மாமாவே போய் டம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பார்.

எங்களிடம் மாமாதான் ஆர்டர் எடுப்பார். அப்போது சூடாக என்ன ஸ்பெஷல் என்று சொல்லி எங்களுக்குள் ஆசையைத் தூண்டி விடுவார்.

‘டேய்... அந்த பாதாம் அல்வாவை கொஞ்சம் சாம்பிள் எடுத்துண்டு வா’ என்பார்.

சர்வர் ஓடிப் போய் எடுத்து வருவார். எங்கள் இலைகளில் துளித் துளி வைக்கப்படும். அதை வழித்து வாயில் போட்டுக் கொண்டால், விட்டு விடுவோமா, என்ன? ஆளாளுக்கு ஒரு பிளேட் பாதாம் அல்வா சொல்லி விடுவோம்.

அதுதான் பாண்டிச்சேரி மாமாவின் வியாபார தந்திரம்.

உபசரிப்பில் இவரைப் போல் பார்க்க முடியாது.

பணம் மட்டும் முக்கியமில்லை. பொருளின் தரமும் முக்கியம்; சுவையும் முக்கியம் என்பதுபோல் உணவுப் பொருட்கள் அனைத்தும் அத்தனை டேஸ்ட்டாக இருக்கும்.

நல்லனவற்றுக்குத்தான் சோதனை அதிகம் வரும். அப்படி ஒரு சோதனையோ என்னவோ?! பின்னாட்களில் இந்த இரண்டு ஓட்டல்களும் காணாமல் போயின.

இன்றைக்கும் மவுண்ட் ரோடு பக்கம் பயணிக்கிறபோது இந்த ஓட்டல்கள் இருந்த பக்கம் பார்வை திரும்பும். அப்படியே தவுஸண்ட்லைட்ஸ் கஃபே காபியும் நினைவுக்கு வரும்.

மறக்க முடியாத மனிதர் - பாண்டிச்சேரி மாமா!

அன்புடன்,
பி. சுவாமிநாதன்