Mahasankara Matrimony







ஆயுத பூஜை என்றாலே, எனக்கு ஆனந்த விகடன்தான் நினைவுக்கு வரும்.

25/10/2020
ஆயுத பூஜை என்றாலே, எனக்கு ஆனந்த விகடன்தான் நினைவுக்கு வரும்.

காரணம் - தொடர்ந்து 22 வருடங்கள் பணி புரிந்த ஸ்தாபனம். வருடா வருடம் அங்கே நடக்கிற ஆயுத பூஜை மிஸ் பண்ண மாட்டேன். யாருமே மிஸ் பண்ண மாட்டார்கள்.

ஆயுத பூஜையை இந்த அளவுக்குப் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்பதை விகடனில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.

1987 மார்ச் மாதம் அங்கே பணியில் சேர்ந்தேன். முதல் ஆயுத பூஜை.

அப்போது தரைத் தளத்தில் அச்சகம். முதல் தளம் எடிட்டோரியல். இரண்டாம் தளம் அட்மினிஸ்ட்ரேஷன். லிஃப்ட் கிடையாது.

அச்சகத்தில் ஆயுத பூஜை நடைபெறும். எலெக்ட்ரிக்கல் பிரிவு ஊழியர்கள் ஸ்பீக்கர் பாக்ஸ்கள் வைத்து பாட்டு போட்டிருப்பார்கள். அச்சகம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு, கலர் கலர் தாள்களால் அலங்கரிக்கப்படும்.

அச்சகத்தின் நடுவே ஓரிடத்தில் பெரிய சரஸ்வதி படம் வைத்து அலங்கரித்திருப்பார்கள். அங்கேதான் பூஜை நடக்கும்.

அன்றைய தினம் அலுவலகம் செல்வதே சந்தோஷமாக இருக்கும். உற்சாகமான பருவம். காலம்.

ரேக் ரேக்காக கூல் டிரிங்க்ஸ் வந்து இறங்கும். எடிட்டோரியல் பிரிவு எல்லாவற்றுக்கும் இன்சார்ஜ் மனோகர் என்பவர். முறுக்கு மீசை வைத்திருப்பார். ஆள் பார்க்க தாட்டியாக இருப்பார். போலீஸ்காரர் மாதிரி இருப்பார். பெரம்பூரில் இருந்து சைக்கிளில் மவுண்ட் ரோடு வருவார். நல்ல மனிதர். ரொம்பவும் சிக்கனம். பெண்களைப் பெற்றவர்.

எடிட்டோரியலில் இருக்கிற யாராக இருந்தாலும், மனோகரின் தயவு வேண்டும். பணி நேரத்தில் டிபன் வேண்டுமா, பேனா வேண்டுமா, மாத்திரை வேண்டுமா, அவசரமாக வெளியே செல்ல கார் வேண்டுமா... இப்படி எதுவாக இருந்தாலும் மனோகர்தான்!

முறுக்கு மீசையுடன் இருக்கும் மனோகரை முதன் முதலில் பார்த்தபோது எனக்குக் கொஞ்சம் பயம். ‘மனோகருக்குக் கடலை மிட்டாய் பிடிக்கும். மதியம் உணவு இடைவேளையின்போது வெளியே போறப்ப ரெண்டு கடலை மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்து குடு. ஆளு கூலாயிடுவார்’ என்று அட்டெண்டர் ஒருவர் சொன்னார்.

அவ்வப்போது கடலை மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். ‘என்னடா சாமா... இன்னிக்கு என்ன லஞ்ச் கொண்டு வந்தே?’ என்று கேட்கிற அளவுக்கு மனோகர் பழக்கமானார்.

ஏன், மனோகரைப் பற்றி இப்படி ஒரு பீடிகை என்றால், இந்த ஆயுத பூஜை கூல் டிரிங்க்ஸ், ஸ்வீட், பொரி - இதற்கெல்லாம் இவர்தான் அத்தாரிட்டி.

சிலருக்கு அவர்கள் இருக்கிற இடத்துக்கு கூல் டிரிங்க்ஸ் வந்து விடும். சிலர் மனோகர் இருக்கிற இடம் தேடிப் போய் வாங்கிக் குடிக்க வேண்டும். நான் இரண்டாவது கேட்டகிரி. அப்படி நேரில் போகிறபோது ஒரு பாட்டில் குடித்து விட்டு, இன்னொரு பாட்டிலுக்காக மனோகரிடம் கெஞ்சியதும் உண்டு. முணுமுணுத்துக் கொண்டே கொடுத்ததும் உண்டு.

அங்கே தருகிற ஸ்வீட் பாக்ஸையும் (இந்த வருடம் எந்தக் கடையில் இருந்து ஸ்வீட் என்று ஊழியர்கள் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், மனோகருக்கு முன்கூட்டியே தெரிந்து விடும். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்), பொரி பொட்டலத்தையும் எடுத்துச் செல்வதற்கு அன்றைக்கு வீட்டில் இருந்தே ஒரு பை கொண்டு செல்வோம்.

வீட்டுக்குப் போய்த்தான் அந்த ஸ்வீட் பாக்கெட்டைப் பிரிப்பது வழக்கம். விகடனில் தரப்படுகிற பொரி இப்போது விநியோகிக்கப்படுகிற மாதிரி முட்டைப் பொரி அல்ல. கார்த்திகைப் பொரி. இதில் பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரை கலந்திருக்கும்.

சென்னையில் சில காலம் மயிலாப்பூரில் நடுத் தெருவில் (தெருவின் பெயரே இதுதான்) என்னுடன் இருந்த அம்மா பொட்டுக் கடலையைப் பிரித்து சட்னிக்குப் பயன்படுத்துவார். நாட்டுச் சர்க்கரையைப் பிரித்து பானகத்துக்கு. பொரி மட்டும் அவ்வப்போது தனியே சாப்பிடுவார். சமயத்தில் பொரி உருண்டையும் தயார் செய்திருக்கிறார்.

எல்லா பணியாளர்களும் அச்சகத்தில் கூடி இருக்க... அப்போதைய முதலாளி எஸ். பாலசுப்ரமணியன் கம்பீரமாக நடந்து வருவார். அவர் வருகிறபோது அச்சக ஊழியர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்பார்கள். புன்னகையோடு எல்லோரையும் பார்த்துக் கைகூப்புவார்.

எல்லா பிரிவு ஊழியர்களுமே உற்சாகமாக இருப்பார்கள்.

அன்றைக்கு வேலையே இருக்காது. எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் பூஜை என்பதால், அறிவிக்கப்படாத விடுமுறை.

ரொம்பவும் ஜாலியாகப் போன நாட்கள்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்