Mahasankara Matrimony







எதற்கும் இரண்டு பக்கம் உண்டு.

22/10/2020
எதற்கும் இரண்டு பக்கம் உண்டு.

கொரோனாவுக்கும்தான்!

நம்மை பாதிக்கலாம்; பாதிக்காமலும் இருக்கலாம்.

இறை அருளால் எவரையுமே கொரோனா இனி தாக்கக் கூடாது என்றே பிரார்த்திப்போம்.

என்றாலும், யதார்த்தம் என்கிற ஒன்று உண்டு.

மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா சொல்லிக்காமல் கொள்ளாமல் ஓடி விட்டதாகவே தோன்றுகிறது. காரணம், லாக் டௌன் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கிறது. ஒரு வகையில் சந்தோஷம்தான். அதே சமயம் நம்மை எதிர்நோக்கி இருக்கிற ஆபத்துகளையும் உணர வேண்டும்.

இரு வகையான பேச்சுக்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன.

ஒன்று - ‘கொரோனாவுக்கெல்லாம் பயந்து வேலைக்குப் போக முடியாம வீட்லயே முடங்க முடியாது... பொழப்புன்னு ஒண்ணு இருக்கு. கூடிய மட்டிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் உயிரை நாமே பாதுகாக்க வேண்டும்.’

இரண்டு - ‘கொரோனா இன்னும் முற்றிலும் போகலை சார்... நம்மைச் சுத்தியே இருக்கு. ரொம்ப ஜாக்கிரதையாவே இருக்கணும்.’

பிழைப்பும் முக்கியம்; உயிரும் முக்கியம்.

நல்ல விசேஷங்களுக்கான அழைப்பிதழ்கள் மெள்ள மெள்ள வரத் துவங்குகின்றன. நண்பர்களும், சொந்தங்களும் ‘இன்விடேஷன் வாட்ஸப்ல அனுச்சிருக்கோம். நேர்ல வர முடியலை. அவசியம் வந்துடுங்க’ என்கிறார்கள் போனில்.

ஆனாலும், வாழ்த்துவது நேரிலா, போனிலா..?! பலரும் குழம்புகிறார்கள். திடமான முடிவெடுக்க முடியவில்லை.

‘வாழ்த்துவதற்கு மனம்தான் தேவை. இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்தலாம்’ என்கிறார்கள் ஒரு சாரார்.

‘ரொம்ப பழகிட்டோம். நேர்ல போகாம இருக்க முடியலை’ என்று தவிக்கிறார்கள் இன்னொரு சாரார்.

எந்த முடிவு வேண்டுமானாலும் எடுங்கள்.

அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பாதகமாகி விடக் கூடாது.

இயல்பு நிலை வெகு சீக்கிரமே திரும்ப பிரார்த்திக்கிறேன். அச்சமும், கவலையும் ஓட வேண்டும்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்