Mahasankara Matrimony







இது திருப்புறம்பயம் கதை. சொந்த ஊர் நினைவுகள்... - P.Swaminathan

15/10/2020
எங்கள் ஊரில் இருக்கிற ஒரே கடைத் தெரு அதுதான். பஸ் ஸ்டாண்டும் அதுதான்.

இது திருப்புறம்பயம் கதை. சொந்த ஊர் நினைவுகள்...

கும்பகோணத்தில் இருந்து 6-ஆம் நம்பர் பஸ், 18-ஆம் நம்பர் பஸ் வரும்.

இரண்டில் பெரும்பாலும் ஒரு பஸ் மட்டுமே எங்க ஊர் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும். கும்பகோணம் செல்லும் திருப்புறம்பயம்வாசிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் கிளம்புகிறபோது, அடுத்த பஸ் பாலக்கரை மன்னியாற்றுப் பாலத்தில் ஏறி ஊருக்குள் வந்து கொண்டிருக்கும். ஒரு பஸ் கிளம்புகிறபோது இன்னொரு பஸ் எதிரில் வருகிற இந்த நிகழ்வு, தற்செயலாக நடப்பதுதான். இது தவிர தளிக்கோட்டை, எஸ்.ஆர்.வி.எஸ். பஸ்களும் எங்கள் ஊருக்கு குறிப்பிட்ட சில சர்வீஸ்கள் வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

கடைத் தெரு என்றால் தி.நகர் ரங்கநாதன் தெரு மாதிரி நினைக்கக் கூடாது. இந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அவ்வளவுதான். மளிகை, தையலகம், உர மருந்து எல்லாமே உள்ளூரில் உண்டு.

கடைகளைத் தாண்டி ஒரு ஓட்டல். ஜகதீச ஐயர் ஓட்டல் என்று அழைப்போம். ஓட்டலுக்குப் பக்கவாட்டில் பின்பக்கமாக ஒரு செக்கு. எப்போதும் எண்ணெய் ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். மாடுகள் இழுத்துக் கொண்டு செல்லும்.

வீட்டின் எண்ணெய்த் தேவைக்கு அவ்வப்போது என்னை செக்கு இருக்கும் இடத்துக்கு அனுப்புவார்கள். தேவைப்படுகிற எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றித் தருவார்கள். அப்போதுதான் ஆட்டியது. சூடாக இருக்கும்.

எண்ணெய் வாங்கும்போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் சாம்பார் வாசனை காற்றில் கலந்து வந்து மணக்கும்.

அப்பா எப்போதாவது காசு கொடுப்பார். வலது உள்ளங்கையில் சில்லறைக் காசுகளை வைத்துக் கொண்டு பார்வையைக் குறுக்கியபடி ஐந்து காசுகளையும் பத்து காசுகளையும் எண்ணி எண்ணி அப்பா கொடுக்கும் அழகு தனி.

காசுகளைக் கையில் வாங்கிய மறுகணம் டிராயர் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு சிட்டாகப் பறந்து ஜகதீச ஐயர் ஓட்டலில் போய் அமருவேன். உட்காருவதற்கு மர பெஞ்ச். இலைகள் போடுவதற்கு அதை விட உயரமான மர பெஞ்ச்.

தொப்பைக்கு மேல் ஏற்றி வேஷ்டி கட்டி இருக்கும் ஜகதீச மாமா டேபிள் அருகே வருவார். அதிர்ந்து பேசாத அவரது முகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘என்னடா அப்பா காசு குடுத்தாளா? என்ன வேணும்?’ - கேட்டுக் கொண்டே இலையைப் போடுவார். அவரே ஜலம் தெளிப்பார்.

‘இட்லி மாமா...’ - சொல்லும்போதே பார்வை இட்லிகள் அடுக்கி இருக்கிற கண்ணாடி ஷெல்ப்புக்குள் போய் நிற்கும். இன்னும் ஒரு சில விநாடிகளில் சட்னி மற்றும் சாம்பாரில் தோய்ந்த இட்லிகளைச் சாப்பிடப் போகிறோம் என்கிற அந்தப் பரபரப்பு இருக்கிறதே... அந்த சுகமே தனி. இன்றைக்கு எத்தனை காஸ்ட்லி ஓட்டலுக்குப் போய் இட்லி, வடை சாப்பிட்டாலும் ஜகதீச ஐயர் ஓட்டலில் பரபரப்போடு அமர்ந்து சாப்பிட்ட அந்த சுகம் இல்லை.

இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஜகதீச ஐயர் சாம்பார் வாளியோடு வந்து பதமாக இட்லி மேல் ஊற்றிக் கொண்டே இருப்பார். காசு வாங்கிக் கொண்டு புன்னகையோடு அனுப்புவார் மாமா.

ஜகதீச ஐயரின் பையன்கள் டெல்லியில் நன்றாக இருப்பதாக யாரோ ஊர்க்காரர் ஒருவர் எத்தனையோ வருடங்களுக்கு முன் சொன்னார்.

பெருமிதமாக இருந்தது.

இன்றைக்கும் திருப்புறம்பயம் செல்லும்போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் இருந்த இடத்தைப் பார்ப்பேன். எல்லாம் முற்றிலும் மாறி விட்டது.

ஆனால், அந்த சாம்பார் வாசம் மனசுக்குள்!

அன்புடன்,
பி. சுவாமிநாதன்