Mahasankara Matrimony







Message From our Founder

04/07/2020
ஸ்ரீகுருப்யோ நம:

இன்றைக்கு குருபூர்ணிமா தினம். சாதுர்மாஸ்ய விரதத்தை மகான்கள் துவங்குவது தொன்றுதொட்ட வழக்கம்.

குருபூர்ணிமா தினத்தை என்னால் மறக்கவே முடியாது.

சரியாக எட்டு வருடங்களுக்கு முன் இதே குருபூர்ணிமா தினம் (2012)...

அன்றைக்கு இருந்த பி. சுவாமிநாதன் எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமே. சொற்பொழிவாளன் கிடையாது.

2009-ல் ஆனந்த விகடனில் இருந்து வெளி வந்தேன்.

2012-ன் துவக்கத்தில் திரிசக்தி குழுமத்தில் இருந்து வெளி வந்தேன்.

அடுத்து என்ன செய்வது? எங்கே சேருவது என்று தடுமாற்றம், குழப்பம்.

ஒரு கால் நூற்றாண்டு பத்திரிகைகளில் பணி புரிந்தாயிற்று. மீண்டும் பத்திரிகைப் பணி தேவையா? சொந்தமாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எனக்குள் இருந்ததே தவிர, என்ன செய்வது என்று புரியவில்லை.

பொருட்களை வாங்கிப் போட்டு வியாபாரம் செய்யத் தெரியாது.

ஓரிரு முறை செய்து, நஷ்டப்பட்டு விட்டேன்.

எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த தொழிலைத்தான் என்னால் செய்ய முடியும். அது மட்டுமே எனக்குப் பழக்கப்பட்டிருந்தது.

மனதில் பட்டதை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். பலரும் பலது சொன்னார்கள்.

என் இனிய நண்பர் இசைக்கவி ரமணன் அவர்கள், ‘‘பத்திரிகையை விட்டுடு ஸ்வாமி... மகா பெரியவா பத்தி சொற்பொழிவு செய்ய ஆரம்பியேன்...’’ என்றார் சாதாரணமாக.

எனக்கு அதிர்ச்சி. ‘‘அண்ணா... நான் எப்படிப் பேச முடியும்? எனக்கு எழுத மட்டும்தானே தெரியும்..’’ என்றேன் திடமாக.

‘‘முடியும் ஸ்வாமி... மகா பெரியவா பத்தி நிறைய எழுதி இருக்கே... எழுதத் தெரிந்த உன்னால் பேசவும் முடியும். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பார். யோசனை பண்ணு’’ - ரமணன் சொன்னார்.

இவர் சொன்னதை ஒரு சில நாட்கள் மனசுக்குள் அசை போட்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘நம்மால் ஒரு மேடையில் உட்கார்ந்து ஒண்ணரை மணி நேரம் தொடர்ந்து பேச முடியுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

எழுத்து என்பதை எழுதி எழுதி, நாம் எடிட் செய்து கொள்ளலாம். ஃபைனல் வெர்ஷன்தான் அச்சுக்குப் போகும். படிக்கிற அன்பரைப் பரவசப்பட வைக்க முடியும்.

‘பேச்சு’ அப்படி இல்லையே! பேசினால், அது ‘லைவ்’!

எனக்குள் ஒரு பயம்! ‘பேசுகிறேன் பேர்வழி’ என்று எதையாவது தத்தக்காபிக்கா என்று பேசி எழுத்தாளனாக இருக்கும்போது கிடைத்த கொஞ்சநஞ்ச பேரையும் கெடுத்துக் கொண்டு விடுவேனோ என்று உள்ளூர ஒரு பயம்.

அன்றைக்கு குருபூர்ணிமா (2012).

இரவு தூக்கம் வரவில்லை. நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனவே... என்ன செய்யப் போகிறேன்? லௌஹீகம் ஓட வேண்டுமே!

எனக்குள் ஏராளமான விவாதங்கள்... சொற்பொழிவில் இறங்கலாமா? இல்லை ஏதாவது பத்திரிகையில் - கிடைக்கிற சம்பளத்தில் சேர்ந்து விடலாமா?’

நள்ளிரவு முழுக்க மனப் போராட்டம். நான் மேடையில் பேசினால் எப்படி இருக்கும் என்று எனக்குள்ளேயே ஒரு ஒத்திகை பார்த்தேன். இதுவரை நான் படித்த/ எழுதிய/ கேள்விப்பட்ட பல ஆன்மிக விஷயங்களைப் பேசினால் எப்படி இருக்கும் என்று திரும்பத் திரும்ப மனதில் ஓடியது.

கொஞ்சமும் தூக்கம் வரவில்லை. மனைவியும் மகளும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியான உறக்கம் அவர்களுக்குத் தொடர வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு நல்ல முடிவை எடுத்தே ஆக வேண்டும்.

அதிகாலை சுமார் 3 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மனதில் ஒரு பிரகாசமும் தெளிவும் ஏற்பட்டது. அந்தப் பிரகாசத்தை எனக்குள் ஏற்படுத்தியவர் குருமகான் மகா பெரியவாளாகத்தான் இருக்க முடியும்.

மகா பெரியவாளைப் பற்றிப் பேசுவது என்று முழு மனதாகத் தீர்மானித்தேன். என்னையும் அறியாமல் புது உத்ஸாகம் வந்தது. புது உலகம் ஆயிற்றே... எப்படிப் பண்ணப் போகிறேன் என்று எந்தக் கவலையும் இல்லை. ‘எல்லாவற்றையும் மகா பெரியவா பார்த்துப்பார்...’

அதன் பின் என் இனிய நண்பர்கள் கிருஷ்ண கான சபா பொதுச் செயலாளர் திரு பிரபு அவர்களும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு முரளி அவர்களும் - நான் பேசி நானே பார்த்திராதபோது - என்னை நம்பி (என்னை என்று சொல்லக் கூடாது... மகா பெரியவாளை நம்பி என்று சொல்ல வேண்டும்) மேடை ஏற்றினார்கள். வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் அவை...

2012 குருபூர்ணிமாதான் என்னை நிரந்தர சொற்பொழிவாளன் ஆக்கியது.

எனது முதல் சொற்பொழிவு மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் அமைந்தது என் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். காரணம் - மகா பெரியவாளின் திருப்பாதங்கள் பட்ட இடம் இது. இந்த நல்வாய்ப்பை எனக்கு வழங்கியவர் - எனதருமை நண்பர் கண்ணன் விக்கிரமனின் தகப்பனார் கலைமாமணி ‘அமுதசுரபி’ விக்கிரமன் அவர்கள்.

தொலைக்காட்சிகள், மேடைகள், சபாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள், வெளிநாடுகள், பிரபல ஆலயங்கள் என்று இந்தப் பயணம் இனிதே தொடர்கிறது.

மகா பெரியவா தவிர இன்று பல ஆன்மிகத் தலைப்புகளையும் பேசி வருகிறேன் என்றால், இது மகா பெரியவா எனக்கு இட்ட பிச்சை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்தான் எனக்குள் இருந்து ஊக்குவிக்கிறார் என்று மனமார நம்புகிறேன்.

தவிர என் ஆத்மார்த்த நண்பர்களாகிய உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் என்னை மேலும் உத்ஸாகப்படுத்தியது.

நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... குருபூர்ணிமா தின வாழ்த்துக்கள்!

மகா பெரியவா உங்கள் வாழ்வில் மேலும் மேலும் வளம் சேர்க்க வேண்டும் என்று இந்த குருபூர்ணிமா நாளில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

பெரியவா சரணம்.

அன்புடன்,

பி. சுவாமிநாதன்